உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஆண்டுக்கு 150 பேரை காவு வாங்கும் தேசிய நெடுஞ்சாலை

ஆண்டுக்கு 150 பேரை காவு வாங்கும் தேசிய நெடுஞ்சாலை

ஓசூர்: ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலை, ஆண்டுக்கு கிட்டத்தட்ட, 150 பேர் வரை காவு வாங்கி வருகிறது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வகையில், எப்போது விபத்து நடக்குமோ என்ற அச்சத்தில், இச்சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து, தமிழக எல்லையான ஓசூர் வழியாக கிருஷ்ணகிரியை கடந்து, தர்மபுரி, சேலம் மற்றும் சென்னைக்கு செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடியில் துவங்கி, கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் வரை கிட்டத்தட்ட, 55 கி.மீ., துாரம், தேசிய நெடுஞ் சாலையில் பயணிக்க மக்கள் பெரிதும் அச்சப்படும் நிலை உள்ளது. குறிப்பாக, ஜூஜூவாடி யிலிருந்து, மேலுமலை வரை மிகவும் ஆபத்து நிறைந்த வகையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. மேடு, பள்ளம் நிறைந்ததாக சாலை உள்ளதால், விபத்துகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன. குறிப்பாக, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அடுத்தடுத்து வாகனங்கள் மோதும் சங்கிலி தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன. கடந்த ஜன., முதல் கடந்த, 12ம் தேதி வரை இந்த தேசிய நெடுஞ்சாலையில், 80க்கும் மேற்பட்ட விபத்துக்களில், 90க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலும், மருத்துவமனை செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, 100க்கும் மேற்பட்ட விபத்துகளில் பலர் படுகாயமடைந்து, அதில், 20 சதவீதம் பேர், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து உயிரிழந்துள்ளனர். கடந்த ஜன., முதல் கடந்த, 12ம் தேதி வரை கிட்டத்தட்ட, 110 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில், 80 சதவீதம், ஜூஜூவாடி - மேலுமலை இடையில் தான் நடந்துள்ளன. ஆண்டுக்கு சராசரியாக, 150 பேர் வரை இந்த தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். அதே அளவிற்கு காயமடைகின்றனர். விபத்துகளை குறைக்க தான், தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை, போலுப்பள்ளி மருத்துவக்கல்லுாரி என, ஆறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதில், சிப்காட் ஜங்ஷன், கோப சந்திரத்தில் மட்டும் பணி நடக்கிறது. சரியான திட்ட மிடல் இல்லாமல், பாலம் பணி இழுத்தடிக்கப்பட்டதால் வாகன போக்குவரத்து முடங்கி, பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சங்கிலி தொடர் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலைகளை சீரமைப்பதில்லை. மழைக்காலங்களில் அட்டகுறுக்கி, குமுதேப்பள்ளி மேம்பாலம் உட்பட பல இடங்களில் மழைநீர் ஆறாக ஓடுகிறது. விபத்துகளை குறைக்கவோ, சாலையை முறையாக பராமரிக்கவோ, தேசிய நெடுஞ்சாலைத்துறை முழு முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. உயிர்க்கொல்லி சாலையாக உள்ள ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், உயிர் பலிகளை குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேசிய நெடுஞ்சாலைத்துறை எடுக்காத போதும், மாவட்ட நிர்வாகமாவது தலையிட்டு, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மாவட்டத்தில் 330 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஜன., முதல், அக்., 12ம் தேதி வரை நடந்த விபத்துகளில் சம்பவ இடத்திலும், மருத்துவமனை செல்லும் வழியிலும் மொத்தம், 330க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர சிகிச்சையில் இருந்த பலர் உயிர் இழந்துள்ளனர். அதையும் சேர்த்து பார்த்தால் இதுவரை, 400 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த, 2023ல், சாலை விபத்தில், 753 பேர் உயிரிழந்தனர். அது கடந்தாண்டு, 683 ஆக குறைந்த நிலையில், நடப்பாண்டு அதை விட குறைவாக இறப்பு பதிவாகும் என, போலீசார் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை