மேலும் செய்திகள்
நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா
26-Sep-2025
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடந்தது. திட்ட அலுவலர் ஜெகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தனபால் பேசுகையில், ''என் கடன் பணி செய்து கிடப்பதே எனும் வாசகத்திற்கு ஏற்ப, நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் சமூக பணிகளில் கூடுதல் பொறுப்புடன் செயலாற்ற வேண்டும்,'' என்றார். சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பேசுகையில், ''சமூக சேவை ஆற்றுவதில் மற்ற மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். நாட்டு வளம், இயற்கை வளம் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மனித உயிர்களை பாதுகாப்பதில், முதலுதவி செய்வதில் முன்மாதிரியாக திகழ வேண்டும்,'' என்றார். இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை துணை இயக்குனர் டிராவின் சார்லஸ்டன், மாணவ, மாணவியர் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்றார். கட்டுரை, பேச்சு, வினாடி-வினா, ஓவியப் போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சரவணகுமார், ஸ்டீபன் விக்டர் ஆன்டனி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். அனைத்து துறை தலைவர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வேல்சாமி நன்றி கூறினார்.
26-Sep-2025