மேலும் செய்திகள்
பானை ஓடுகளை ஆவணப்படுத்தும் பணி
13-Nov-2024
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், குன்னத்துார் பஞ்., சென்னானுாரில், புதிய கற்கால பண்பாட்டு கூறுகளை கண்டறியும் வகையில், தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், ஜூன் 18- முதல் தொல்லியல் அகழாய்வு நடந்து வருகிறது.சென்னானுார் மலையின் மேற்கு பக்க அடிவாரத்தில் அமைந்துள்ள தொல்லியல் மேட்டில், 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு, 327 தொல்பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.அகழாய்வு இயக்குனர் பரந்தாமன் கூறியதாவது:
சென்னானுாரில் நடக்கும் அகழாய்வில், புதிய கற்காலத்தை சேர்ந்த பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது களமேற்பரப்பாய்வில், எட்டு கருவிகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், 'டோலராய்டு' என்னும் மூலக்கற்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளன. இக்கருவிகள் வேட்டையாட, மரங்களை வெட்ட, குழிகள் தோண்ட மற்றும் நிலத்தை உழ ஏர் கலப்பையாக பயன்பட்டிருக்கலாம்.சென்னானுார் அகழாய்வில் காலவரிசைப்படி நுண்கற்காலம், புதிய கற்காலம், புதிய கற்காலத்தில் இருந்து இரும்பு காலத்திற்கான மாற்றம் அடைந்த நிலை மற்றும் வரலாற்று துவக்க காலத்தின் நிலை, இக்குழியில் காணப்படும் மண்ணடுக்கின் வாயிலாக அறிய முடிகிறது.இத்தொல்லியல் தளத்தின் உறுதியான காலத்தை, அறிவியல் முறைப்படி அறிய, மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இப்பகுதியின் சுற்றுச்சூழல் அடிப்படையிலும், தென்பெண்ணையாற்றின் கிளை ஆறான பாம்பாறு, இத்தொல்லியல் மேட்டினை ஒட்டியும் பாய்வதால், புதிய கற்காலத்தில் வேளாண்மை மேற்கொள்வதற்கும், ஆடு, மாடுகளை வளர்ப்பதற்கும் ஏற்ற இடமாக, சென்னானுார் அமைந்துள்ளது.இந்த ஆய்வுகளால், தமிழகத்தில் சிறந்த புதிய கற்கால பண்பாட்டை கொண்ட தொல்லியல் தலமாக சென்னானுார் விளங்கியதும் தெரிகிறது.இவ்வாறு கூறினார்.
13-Nov-2024