பணி நிரந்தரம் கோரி 5வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
கிருஷ்ணகிரி: தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி, கிருஷ்ணகிரி, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு, 5வது நாளாக நேற்று போராட்டம் நடந்தது.தி.மு.க., அரசு தேர்தல் வாக்குறுதியில் குறிப்பட்டது போல், அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணிநிரந்தரம் செய்யக்கோரி கடந்த, 18 முதல், சென்னையில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு, 5வது நாளாக நேற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமென்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அரசு செய்துள்ள மேல்முறையீட்டை திரும்பப் பெறவேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை-, 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணி செய்து, பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவருக்கும், மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.