மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்பு தானம்
மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்பு தானம்போச்சம்பள்ளி, அக். 20-கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜபெருமாள், 28; இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 17ல் தன் இரு சக்கர வாகனத்தில் திப்பம்பட்டியிலிருந்து கம்பைநல்லுார் சென்றபோது தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறியதை அடுத்து, அவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அவரின் உடல் நேற்று மாலை 3:00 மணிக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா மற்றும் நாகரசம்பட்டி போலீசார் பங்கேற்றனர்.