புளியோதரையில் பாம்பு கிடந்த விவகாரம் டெண்டரை ரத்து செய்ய சப்-கலெக்டரிடம் மனு
ஓசூர், ஓசூர், மலைக்கோவிலில் புளியோதரையில் இறந்த பாம்பு கிடந்த விவகாரத்தில், தனி நபரின் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என, சப்-கலெக்டர் பிரியங்காவிடம், ஹிந்து ஜனசேனா நிறுவன தலைவர் முரளிமோகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மனு வழங்கினர்.அதில் கூறியிருப்பதாவது: ஓசூர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில் கடந்த, 6ம் தேதி பெண் ஒருவர் வாங்கிய புளியோதரையில், இறந்த நிலையில் பாம்பு குட்டி கிடந்ததாக பத்திரிகைகள், ஊடகங்களில் செய்தி வெளியானது. கோவிலில் சுவாமிக்கு படைத்த பின், பக்தர்களுக்கு வழங்குவது தான் பிரசாதம். ஆனால், திருச்சியை சேர்ந்த வாசுதேவன், ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் டெண்டர் எடுத்து நடத்தி வரும் கடைக்கு, பிரசாத கடை என பெயர் வைத்து, புளியோதரை விற்பனை செய்துள்ளார். அது பிரசாதம் கிடையாது.சுகாதாரமற்ற முறையில் உணவை சமைத்து, சுவாமிக்கு படைக்காமல் லாப நோக்கில் பிரசாதம் என்ற பெயரில் கடையில் வைத்து விற்பனை செய்துள்ளனர். இது முழுக்க, முழுக்க வாசுதேவன் என்ற தனி நபருடைய தவறு தான். எனவே, டெண்டரை ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை சரி செய்ய, தனிநபர் விற்பனை செய்த உணவில் தான் பாம்பு கிடந்தது. பிரசாதத்தில் பாம்பு விழவில்லை என்பதை, ஹிந்து சமய அறநிலையத்துறை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.