ஓசூர் தனியார் ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த பஞ்சாப் டிரைவர் கைது
கிருஷ்ணகிரி: ஓசூர், தனியார் நிறுவன ஊழியரிடம், 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் பஞ்சாப் மாநில டிரைவரை, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர், 56 வயது தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம் என கூறப்பட்டிருந்தது.இதை நம்பி, அதில் கூறப்பட்டிருந்த வங்கி கணக்கிற்கு, 35 லட்சம் ரூபாயை கடந்தாண்டு பிப்., மாதம் அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு எந்த தொகையும் வரவில்லை. சந்தேகமடைந்த அவர், தனக்கு மெசேஜ் வந்த எண்ணை தொடர்பு கொண்டார். அது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.இது குறித்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அத்தொகை, பஞ்சாப் மாநிலம் பாசில்கா மெயின் கிளையிலுள்ள ஒரு வங்கி கணக்கிற்கு சென்றது தெரிந்தது. இதை தொடர்ந்து அத்தொகையை எடுக்க முடியாத வகையில், கணக்கை போலீசார் முடக்கினர். தொடர்ந்து குற்றவாளியை பிடிக்க, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டார்.கிருஷ்ணகிரி சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி., நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், பஞ்சாப் மாநிலம் பாசில்கா நகருக்கு சென்றனர். அங்கு கடந்த 7ல், சந்தேகப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான, பாசில்கா நகரை சேர்ந்த கார் டிரைவர் ஹரீஷ்குமார், 44, என்பவரை கைது செய்தனர்.அவரை பாசில்கா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கிருஷ்ணகிரிக்கு அழைத்து வந்தனர். இங்கு, கிருஷ்ணகிரி ஜே.எம்., 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை, போலீசார் தேடி வருகின்றனர்.