பெரிய ஏரி செல்லும் கால்வாயை துார்வார கோரிக்கை
கிருஷ்ணகிரி, 'வேப்பனஹள்ளி அருகே மார்கண்டேயன் நதியிலிருந்து பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயை துார்வார வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வழியாக வரும் மார்கண்டேயன் நதி, குருபரப்பள்ளி அருகே தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. இது, குப்பச்சிபாறை தடுப்பணை இடது புற கால்வாய் வழியாக செல்லும் நீர், கிருஷ்ணகிரி பெரிய ஏரியில் கலக்கிறது. தற்போது பெய்து வரும் தொடர்மழையாலும், மார்கண்டேயன் நதியின் கிளை நதிகளான ஆந்திரமாநிலத்தின் குப்தா, திம்மம்மா ஆறுகள் மூலமும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் குப்பச்சிபாறை தடுப்பணையிலிருந்து பெரிய ஏரிக்கு செல்லும், 15 கி.மீ., கால்வாய் முழுவதும் புதர் மண்டி இருப்பதால் நீர் செல்லாமல் ஆங்காங்கு தேங்கி உள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது வடகிழக்கு பருவமழையும் ஆரம்பித்துள்ள நிலையில் புதர் மண்டி கிடக்கும் பெரிய ஏரி செல்லும் கால்வாயை துார்வார வேண்டும். இதனால் லக்கபத்தனப்பள்ளி, திப்பனப்பள்ளி, ஆற்றுகால்வாய், பண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் பாசன வசதி பெறும். பெரிய ஏரிக்கும் நீர் செல்லும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.