மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விற்பனை; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், ஜான் லுார்து சேவியர் வெளியிட்டுள்ள அறிக்கை:சூளகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மூலம், விவசாயிகளுக்கு விதைகள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள், உயிரியல் பூச்சி கொல்லி மருந்துகள், பண்ணை கருவிகள் மற்றும் தார்ப்பாய்கள் போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் மேற்கண்ட இடுபொருட்களை மானிய தொகை போக, மீதமுள்ள பணத்தை நேரடியாக செலுத்தி, இதுவரை வாங்கி சென்றனர். இதை எளிமையாக்கும் வகையில், தற்போதைய நேரடி பணம் பெறும் நடைமுறை நிறுத்தப்பட்டு, மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி, இடுபொருட்களை பெற்று கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, சூளகிரி வட்டார விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வாங்க வரும் போது, தங்களது ஏ.டி.எம்., கார்டுகள் அல்லது யு.பி.ஐ., அடையாள எண்களை கொண்டு பணம் செலுத்தி, இடுபொருட்களை பெற்று கொள்ளலாம். கூகுள் பே, போன் பே மூலமாக, கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.