கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் அலுவலகங்களில், இன்று முதல் தங்கப்பத்திரம் விற்பனை துவங்க இருப்பதாக, கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும், இன்று (பிப்., 12) முதல் வரும், 16 வரை தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் ஒரு தனிநபர், ஒரு கிராம் முதல், 4,000 கிராம் வரை வாங்கலாம். ஒரு கிராம் தங்கப்பத்திரத்தின் விலை, 6,263 ரூபாய். தங்கப்பத்திரத்தின் முதலீட்டு காலம், 8 ஆண்டுகள் ஆகும்.முதிர்வு பெறும் தேதியில், அன்றைய தேதியின் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப, தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம்.தேவைப்பட்டால், 5 ஆண்டுகள் முடிந்த பின், தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு, மத்திய ரிசர்வ் வங்கி மூலமாக, 2.5 சதவீத வட்டி கணக்கிட்டு, ஒவ்வொரு, 6 மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும்.இது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய். இத்திட்டத்தில் சேர, ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு ஆகியவை மிகவும் அவசியம். பணம் தேவைப்படும் போது, தங்கப்பத்திரங்களை வைத்து, வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம். தங்கத்தை பத்திர வடிவில் வாங்குவதன் மூலம், செய்கூலி மற்றும் சேதாரம் செலுத்தாமல், தங்கத்தை சேமிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, அருகிலுள்ள அஞ்சல் அலுவலகங்களை அணுகலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.