உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / செயல்படாத சுத்திகரிப்பு நிலையத்தால் தென்பெண்ணையாற்றில் கலக்கும் கழிவுநீர்

செயல்படாத சுத்திகரிப்பு நிலையத்தால் தென்பெண்ணையாற்றில் கலக்கும் கழிவுநீர்

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகியும் செயல்படாமல் உள்ளதால், 6 பஞ்.,களின் கழிவுநீர் தென்பெண்ணையாற்றில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்று, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து. இதை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவுநீர் மேலாண்மைக்காக, இங்குள்ள அம்பேத்கர் நகரில், கடந்த, 2014ல், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதில், காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., மற்றும் சந்தாபுரம், எர்ரஹள்ளி, குண்டலப்பட்டி உள்ளிட்ட 6 பஞ்.,களின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த பஞ்.,களில் இருந்து வரும் கழிவுநீரை இணைத்து, அகண்ட கழிவுநீர் கால்வாய் வழியாக, சந்தாபுரம், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வழியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவும் வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டம், ஒரு வாரம் கூட செயல்படவில்லை.இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை மற்றும் கால்வாயிலுள்ள அடைப்பை அகற்றாததால், சாக்கடை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றில், கழிவுநீர் கலக்கிறது. மேலும் பல பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி, கழிவுநீருடன் கலந்து துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து காவேரிப்பட்டணம் அம்பேத்நகரை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் அமைத்த சுத்திகரிப்பு நிலையத்தில் அவ்வப்போது அதிகாரிகள் வந்து மின் மோட்டார் பொருத்துகின்றனர். மறுநாளே மர்மநபர்கள் திருடி செல்கின்றனர். இப்பகுதியில் போடப்பட்ட இரும்பு வேலியை கூட திருடி விட்டனர். குடிமகன்களின் கூடாரமாக மாறிய இப்பகுதியை, யாரும் கண்டு கொள்வதில்லை. அரசு திட்டம் வீணாகி உள்ளது. இது குறித்து விசாரித்து, புதர் மண்டி கிடக்கும் சாக்கடை கால்வாய் அடைப்புகளை அகற்றி, சுத்திகரிப்பு நிலையத்தில் மோட்டார் பொருத்தி சேவையை துவக்க வேண்டும். திருட்டு சம்பவங்களை தடுக்க பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை