மேன்ஹோல் வழியாக வௌியேறும் கழிவுநீர்: சீரமைக்க வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி, தர்மராஜா கோவில் சாலையில், பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் ஓடுவதை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தர்மராஜா கோவில் சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இச்சாலையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், பாதாள சாக்கடை கால்வாயின் மேன்ஹோல் மூடி வழியாக, அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. நகராட்சி பணியாளர்கள் தற்காலிகமாக கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் வாரத்தில் இரண்டு முறை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. கடந்த, இரண்டு நாட்களாக பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது.இதனால் பள்ளி, மாணவ, மாணவியர் மற்றும் பாதசாரிகள் இச்சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை, நிரந்தரமாக சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.