உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சில வரி செய்திகள்: கிருஷ்ணகிரி மாவட்டம்

சில வரி செய்திகள்: கிருஷ்ணகிரி மாவட்டம்

புகையிலை பொருட்கள் விற்ற 7 பேர் சிக்கினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பொருட்கள், லாட்டரி விற்கிறதா என போலீசார் கண்காணித்தனர். அதன்படி, பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற ஓசூர், மத்திகிரி, பாகலுாரை சேர்ந்த, 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல லாட்டரி விற்ற பர்கூர், கிருஷ்ணகிரி டவுன், குருபரப்பள்ளி, சூளகிரி பகுதியை சேர்ந்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

டூவீலர் மெக்கானிக் மாயம்

ஓசூர்: ஓசூர், அலசநத்தம் சாலை பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் சபீர், 40; டூவீலர் மெக்கானிக்; ஓசூர் மின்வாரிய அலுவலகம் அருகே, ராயக்கோட்டை சாலையோரம் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த, 23ல் காலை, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து கடைக்கு சென்றவர் மாயமானார். அவரது தந்தை பியார் ஜான், 75, புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.

மொபட் மீது லாரி மோதி விபத்து டிரைவர் உட்பட இருவர் இறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த மல்லிப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், 45; கட்டட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர் மணி, 35, டிரைவர்; இருவரும் நேற்று முன்தினம் இரவு, டி.வி.எஸ்., மொபட்டில் சிங்காரப்பேட்டை அருகே சென்றனர். இரவு, 7:30 மணியளவில் நாயக்கனுார் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது எதிரில் வந்த லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

டிராக்டர் மோதி தொழிலாளி சாவு

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வெப்பாலம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 50, கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை தன் வீட்டிலிருந்து, டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸ்.எல்., மொபட்டில் தொகரப்பள்ளிக்கு கூலிவேலைக்கு சென்றார். அன்றிரவு வீடு திரும்ப கெங்காவரம் ஆத்துமேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரில் வந்த டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்தில் ஆறுமுகம் பலியானார். விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மது போதையில் பைக் ஓட்டிய 2 பேருக்கு காப்பு

ஓசூர்: ஓசூர் டவுன் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் பயாஸ், தனசேகரன் ஆகியோர், ராயக்கோட்டை சாலை சந்திப்பு மற்றும் தளி சாலை ஆகிய இடங்களில் தனித்தனியாக வாகன சோதனை செய்தனர். அப்போது, மதுபோதையில் பைக்குகளை ஓட்டி வந்த, தளி சாலை அவ்வை நகரை சேர்ந்த ராஜேஷ், 24, ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோவில் வசிக்கும், திருநெல்வேலியை சேர்ந்த நிரஞ்சன், 24, ஆகிய, 2 பேரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

படிக்கட்டில் தவறி விழுந்த இன்ஜினியர் உயிரிழப்பு

ஓசூர்: ஓசூர், சதாசிவா காலனியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன், 30; பெங்களூரு தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் பராமரிப்பு இன்ஜினியராக பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் காலை, 9:45 மணிக்கு, ராயக்கோட்டை அடுத்த வன்னியபுரம் அருகே உள்ள டாடா எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் புதிய கட்டத்தில், சிசிடிவி கேமரா உள்ளிட்ட பணிகள் தொடர்பாக வேலை செய்து வந்தார். அப்போது முதல் மாடியில் இருந்து இரண்டாவது மாடிக்கு படிக்கட்டுகளில் ஏறிய போது, தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி