உலக பாலைவன தடுப்பு தினம்
அரசு பள்ளியில் கடைபிடிப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாநகர் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து, தேசிய பசுமைப்படை மற்றும் தேசிய மாணவர் படை சார்பில், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உலக பாலைவன தடுப்பு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டி, 'மஞ்சப்பை' விழிப்புணர்வு ஆகியவை நடந்தது. தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ் தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை அலுவலர் கோபு முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் ஆனந்த், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் 'மஞ்சப்பை'களை வழங்கி பாராட்டினார்.நான்கரை பவுன் நகை திருட்டுஓசூர்: அஞ்செட்டி, சேலத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முனேஷ், 50, மரியாளத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார்; இவர் மனைவி சுஜாதா, 45; இவர்களது மகன், மகள் பெங்களூருவில் வசிக்கின்றனர். மனைவியுடன் முனேஷ் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு தரைதளத்திலுள்ள வீட்டை பூட்டி விட்டு, முதல்தளத்திலுள்ள அறைக்கு துாங்கச் சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், தரைதள வீட்டின் கதவை உடைத்து, உள்ளே பீரோவிலிருந்த நான்கரை பவுன் நகையை திருடிச் சென்றனர். நேற்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த நகை திருட்டு போனது முனேஷிற்கு தெரியவந்தது. புகார்படி, அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அடுத்தடுத்து 3 கோவில்களில்
பூட்டை உடைத்து திருட்டு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, குடிமேனஹள்ளி கிராமத்தில், திரவுபதி அம்மன், காளியம்மன், ஓம் சக்தி உள்ளிட்ட பழமையான கோவில்கள் உள்ளன. கடந்த, 3 மாதங்களுக்கு மேலாக கோவில்கள் திறக்கப்படாத நிலையில், நேற்று முன்தினம், 3 கோவில்களின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்த ஒரு பவுன் தாலி, உண்டியலில் இருந்த, 10,000 ரூபாய் காணிக்கையை திருடிச் சென்றுள்ளனர். காளியம்மன், ஓம் சக்தி கோவில்களில் நகை, பணம் ஏதும் இல்லாததால், திருட முயன்ற மர்ம நபர்கள் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றனர். திருட்டு சம்பவம் குறித்து, பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கிரானைட் கடத்திய லாரி பறிமுதல்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அதிகாரிகள், ராயக்கோட்டை - தர்மபுரி சாலையிலுள்ள உடையாண்டஹள்ளி தக்காளி மண்டி பின்புறம் வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 45,000 ரூபாய் மதிப்புள்ள, இரு கறுப்பு நிற கிரானைட் கல்லை கடத்தி செல்வது தெரியவந்தது. இதனால் லாரியுடன் கிரானைட் கல்லை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.