உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

கிருஷ்ணகிரி: புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெருமாளை வணங்கும் பக்தர் கள், புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்தாண்டு புரட்டாசி மாதம் கடந்த, 17ல் துவங்கியது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, கிருஷ்ணகிரி அடுத்த கணவாய்பட்டியில் உள்ள வெங்கட்ரமண சுவாமி, கிருஷ்ணகிரி பொன்மலை சீனிவாச பெருமாள், பாலேக்குளி அனுமந்தராய சுவாமி, கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சநேயர், மலையப்ப சீனிவாச பெருமாள் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.அதேபோல, வேலம்பட்டி அடுத்த பெரிய மலைகோவில், ஐகுந்தம் கொத்தப்பள்ளி சீனிவாச பெருமாளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. பெருமாள் கோவில்களில், கிருஷ்ணகிரி, தர்மபுரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை அளித்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.பெரியமலை தீர்த்தம்போச்சம்பள்ளி அடுத்த, பாளேகுளி பஞ்.,க்கு உட்பட்ட, பெரியமலை தீர்த்தத்தில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால், பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்திற்கு உட்பட்ட காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி, மத்துார், நாகரசம்பட்டி, ஊத்தங்கரை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால், நேற்று பெரியமலை தீர்த்தத்திற்கு வந்து, புனித நீராடி 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி கோஷமிட்டு பெருமாளை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !