கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் 2 மணி நேரம் நடனமாடிய மாணவியர்
கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில்2 மணி நேரம் நடனமாடிய மாணவியர்ஓசூர், டிச. 22-கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், மார்கழி உற்சவம் நடந்து வருகிறது. இதையொட்டி, கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் கோவில் மண்டபத்தில் சலங்கை பூஜை நடந்தது. இதில், கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த வைஷ்ணவி நாட்டிய சாலா பள்ளியில் இருந்து வந்திருந்த பரத நாட்டிய கலைஞர்கள் மிதுன் ஷியாம் மற்றும் தீபிகா கோவிந்தராஜூலு ஆகியோரின் மாணவியரான சரண்யா மற்றும் தனுஸ்ரீ ஆகியோர், கோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று பரத நாட்டியம் ஆடினர். ஸ்ரீ கல்யாண காமாட்சி அம்மன் சன்னதி முன் நடந்த சலங்கை பூஜையில், தொடர்ந்து, 2 மணி நேரம் பரத நாட்டியம் ஆடி இருவரும் சாதனை புரிந்தனர். இதன் மூலம் மாணவியர் இருவரும், பரத நாட்டிய பிரதம பிரவேச வகுப்பிற்கு தகுதி பெற்றனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.