தலசீமியா பாதித்த மாணவி சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பு
பாகலுார் : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரிமலை அருகே கலசபாடியை சேர்ந்தவர் அருள்நாதன், 36; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி லலிதா, 29. இவர்களது மகள் பூர்ணி, 10; ஆறாம் வகுப்பு படிக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே சூடாபுரத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் அருள்நாதன் வசிக்கிறார். பூர்ணி, ஏழு மாத குழந்தையாக இருந்தபோது, 'தலசீமியா' நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஹீமோகுளோபின் அளவு குறைவதை பொறுத்து, 15 நாட்களுக்கு ஒருமுறை பெங்களூரு இந்திராகாந்தி மருத்துவமனையில், பூர்ணிக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே முழுமையாக குணமடைய வாய்ப்புள்ளது. அதற்கு, 14 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்பதால், மகளுக்கு அறுவை சிகிச்சையளிக்க முடியாமல் அருள்நாதன் தவித்து வருகிறார். அரசு, மாணவி சிகிச்சைக்கு உதவ வேண்டும். தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் உதவ விரும்பினால், 98436 48818 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.