உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கனகதாசரின் 536ம் ஆண்டு ஜெயந்தி விழாவில் நேர்த்திக்கடன்

கனகதாசரின் 536ம் ஆண்டு ஜெயந்தி விழாவில் நேர்த்திக்கடன்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் கனக ஜோதி சேவா சமிதி சார்பில், கனகதாசரின், 536ம் ஆண்டு ஜெயந்தி விழா நேற்று நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கனகதாசர் சிலை வைக்கப்பட்டு, மேள, தாளங்கள் முழங்க, டொல்லு குணிதா, வீரகாசை, வீரபத்ர குணிதா ஆகிய பாரம்பரிய நடனங்களுடன் சிக்கம்மா, தொட்டம்மா, வீரபத்திரப்பா உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம தேவதைகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட காளை மாடுகளுடன் ஊர்வலமாக சென்றனர்.தொடர்ந்து, கிராம தேவதைகள் மற்றும் காளை மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின் விரதமிருந்த, 100க்கும் மேற்பட்டோர் தலைமீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சக்கர வாகனங்கள் மற்றும் ஊன்றுகோல் வழங்கப்பட்டன. ரத்த தான முகாம் நடந்தது. விழாவில், தமிழகத்தில் குரும்பர் இன மக்கள், 40 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2.50 லட்சம் பேர் வசிக்கின்றனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில், குரும்பர் இன மக்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள, 6 சட்டசபை தொகுதிகளை எந்த கட்சி வழங்க முன் வருகிறதோ, அந்த கட்சிக்கு தங்களுடைய வாக்குகளை அளிக்க உள்ளதாகவும், அதற்காக சமுதாய தலைவர்களை ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, கெலமங்கலம், ராயக்கோட்டை மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்