உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மதியத்திற்கு மேல் வந்த அறிவிப்பு மழையில் நனைந்தபடி வீடு திரும்பிய மாணவ, மாணவியர்

மதியத்திற்கு மேல் வந்த அறிவிப்பு மழையில் நனைந்தபடி வீடு திரும்பிய மாணவ, மாணவியர்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தபோதும் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை. மதியத்திற்கு மேல் அரை நாள் விடுப்பு அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினர்.தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, தெற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளதால், தமிழகத்தின் பல மாவட்டங்களில், கனமழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரித்தது. இதையடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை அளிக்கப்பட்டது. அடுத்து வரும் நாட்களில் மட்டுமே கிருஷ்ணகிரிக்கு கனமழை எச்சரிக்கையால், நேற்று வழக்கம் போல் பள்ளி, கல்லுாரி இயங்கும் என விளக்கம் அளித்தனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இருப்பினும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிக்காததால், மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லுாரி சென்றனர். தொடர்ந்து கனமழை நீடித்ததால், மதியம், 2:00 மணிக்கு மேல், மாவட்ட கலெக்டர் சரயு, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து பள்ளி மாணவர்களை, மழையில் நனைந்தபடி பெற்றோர் அழைத்து சென்றும், கல்லுாரி மாணவியர் மழையில் நனைந்தபடியும், கடைகளில் ஒதுங்கி நின்று பஸ்சுக்கு காத்திருந்தும் சென்றனர்.* ஓசூர், சூளகிரி பகுதியில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்த நிலையில், காலையில் விடுமுறை அளிக்காத மாவட்ட கலெக்டர், பள்ளி முடியும் நேரத்தில் விடுமுறை அறிவித்தார். அதனால் காலையில் நனைந்து சென்ற மாணவ, மாணவியர், மாலையிலும் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர்.காலையில் விடுமுறை அறிவித்திருந்தால், மாணவ, மாணவியர் மழையில் நனைய வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஆனால், கலெக்டரின் தாமத அறிவிப்பு, காலையிலும், மதியமும் மாணவ, மாணவியரை மழையில் நனைய வைத்து விட்டது. இது பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை