| ADDED : ஜூன் 22, 2024 12:38 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கர்ப்பமாக இருந்த இளம் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தற்கொலைக்கு துாண்டியதாக காதலன் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அன்னியாளம் அருகே சீர்திம்மனட்டியை சேர்ந்தவர் சிக்கதிம்மராயப்பா; இவரது மனைவி லட்சுமியம்மா, 54, கூலித்தொழிலாளி; இவர்களது மகள் சுஜாதா, 19, எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்; அப்பகுதியை சேர்ந்த சுமன், 23, என்பவரும், சுஜாதாவும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியதால் சுஜாதா மூன்று மாத கர்ப்பமானார். இதை வீட்டில் அவர் கூறாமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த அவரது தாய் லட்சுமியம்மா, சுஜாதாவை கக்கதாசம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு பரிசோதனை செய்த போது, சுஜாதா கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து, சுஜாதாவை திருமணம் செய்து கொள்ளுமாறு சுமனிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால், மனமுடைந்த சுஜாதா நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாய் லட்சுமியம்மா கொடுத்த புகார்படி, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப்பதிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், சுமனை நேற்று கைது செய்தனர்.