உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / காவேரிப்பட்டணத்தில் சந்தை கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பிரச்னை

காவேரிப்பட்டணத்தில் சந்தை கடைகள் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பிரச்னை

கிருஷ்ணகிரி சாலையோர ஆக்கிரமிப்பு, சாலையில் நடத்தப்படும் சந்தை கடைகளால் வார இறுதி நாட்களில் போக்குவரத்து பிரச்னையில் சிக்கி, காவேரிப்பட்டணம் மக்கள் தவிக்கின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரத்தின், 36 கிராமங்களுக்கும் முக்கிய நகர் பகுதியாக உள்ளது. இங்குள்ள சேலம் சாலையில், வணிக வளாகங்கள், அரசு பள்ளிகள், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பால், சாலைகள் குறுகி விட்டன. அப்பகுதியில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய்கள் அமைக்கும் பணியும் மந்தகதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் பாலக்கோடு சாலையில் நடந்து வந்த சனிக்கிழமை வாரச்சந்தை கடைகளும், கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்து, சேலம் சாலைக்கு வந்து விட்டன.இதனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் திணறி வருவது வாடிக்கையாகி விட்டது. போக்குவரத்தை சீர்செய்ய போதுமான போலீசாரும் இல்லாமல், சாலைகளின் நாலாபுறமும் இருந்து வரும் வாகனங்கள் காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்ட் முதல், நான்கு ரோடு, பாலக்கோடு பிரிவு சாலை, சேலம் சாலையில் சிக்கி தவிக்கின்றன.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இப்பகுதியில் போக்குவரத்து பிரச்னை குறித்து பலமுறை மனு அளித்தும் யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. நெடுஞ்சாலைத்துறை, டவுன் பஞ்., நிர்வாகம், மற்றும் பொதுப்பணித்துறையினர், ஒருவர் மீது ஒருவர் குறை கூறுகின்றனரே தவிர, பிரச்னைக்கு தீர்வு காண்பதில்லை. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், இரவில் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து, வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்தனர். இப்பிரச்னையை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை