மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு காய்கறி, பழங்கள் ஏற்றுமதி பயிற்சி
கிருஷ்ணகிரி, டிச. 12-கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு, காய்கறி, பழங்கள் மற்றும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு, ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்த தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. முதன்மை அலுவலரும் பேராசிரியருமான தலைவர் அனீஷா ராணி தலைமை வகித்து, பயிற்சியை துவக்கி வைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். இணை பேராசிரியர் (தோட்டக்கலை) ஸ்ரீவித்யா, பழப்பயிரில் மதிப்பு கூட்டுதல் பற்றி விரிவாக கூறினார். இணை பேராசிரியர் (தோட்டக்கலை) செந்தமிழ்செல்வி, காய்கறி பயிரில் மதிப்பு கூட்டுதல் பற்றியும், பேராசிரியர் (விரிவாக்கம்) ஜான்சிராணி, இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு சந்தை படுத்துதல் பற்றியும் எடுத்துரைத்தனர். எலுமிச்சங்கிரி வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் (மனையியல் துறை) பூமதி, காய்கறி, பழங்கள் மற்றும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றி செயல்விளக்கம் மூலம் செய்து காட்டினார். உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை) சசிகுமார், காய்கறிகள் மற்றும் பழங்களில் இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் உத்திகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். உதவி பேராசிரியர் (பூச்சியியல் துறை) கோவிந்தன் நன்றி கூறினார்.