ஓசூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் 4ம் தேதி வாகனங்களுக்கு அனுமதி: காங்., - எம்.பி., உறுதி
ஓசூர்:''ஓசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள, மேம்பாலத்தின் பழுது சீரமைக்கப்பட்டு, வரும், 4ம் தேதி வாகனங்கள் அனுமதிக்கப்படும். மேலும், ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலங்களில், 30 பேரிங்குகள் மாற்றப்பட வாய்ப்புள்ளது,'' என, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேம்பாலத்தில் கடந்த ஜூன், 21ம் தேதி பேரிங் பழுதானது. அதனால், பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள் அவ்வழியாக அனுமதிக்கப்படாமல், ஓசூர் சீத்தாராம்மேட்டிலிருந்து இன்னர் ரிங்ரோட்டில் திருப்பி விடப்பட்டன. ஜூன், 22ம் தேதி, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாருடன் சென்று, பாலத்தை ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலைத்துறை சென்னை மண்டல அதிகாரி வீரேந்திரசாம்பியன், ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும் என்றார். ஆனால், 3 மாதம் நெருங்கும் நிலையில், இன்னும் பணி முடியவில்லை. கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் ஆக., 15க்குள் பால சீரமைப்பு பணிகள் முடிந்து விடும் என்றார். அதுவும் தள்ளி போகிறது. இந்நிலையில், எம்.பி., கோபிநாத் நேற்று பாலத்தை ஆய்வு செய்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட அதிகாரி ரமேஷ் என்பவரிடம் பேசினார். இதை தொடர்ந்து நிருபர்களிடம், அவர் கூறியதாவது:இரு இடத்தில் பேரிங் பொருத்திய நிலையில், மற்ற இரு இடங்களுக்கு பேரிங் பொருத்தும் பணி நடக்கிறது. அது நாளை (செப்.3) முடிந்து விடும். 4ம் தேதி காலை முதல், வாகனங்கள் பாலத்தில் செல்லும். பேரிங்குகள் பழுதானதாக வந்த செய்தி, முற்றிலும் வதந்தி. ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மேம்பாலங்களில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்துள்ளது. அதில் மொத்தம், 30 பேரிங்குகள் பழுதாகி இருக்கலாம் என கருதுகிறோம். அவற்றையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அறிக்கை தயாரானவுடன் பேரிங்குகள் மாற்றப்படும். ஓசூர் மேம்பாலம் போல், கடைசி நேரத்தில் பேரிங்குகளை மாற்றினால் மாதக்கணக்கில் ஆகி விடும். அதற்கு முன்பாக பேரிங்குகளை மாற்றினால், சில மணி நேரம் போக்குவரத்தை மாற்றி விட்டு, பேரிங்குகளை மாற்றி விடலாம். கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், குருபரப்பள்ளி, போலுப்பள்ளி, சாமல்பள்ளம், அட்டகுறுக்கி, கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் அருகே என, 5 இடங்களில், 6 கோடி ரூபாய் மதிப்பில், நடைமேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.