ஒகேனக்கல்லில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 20,000 கன அடியாக அதிகரித்துள்ளது.தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, தேன்கனிக்கோட்டை, தொட்டமஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது, மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 8,500 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, 11:00 மணிக்கு, 14,000 கன அடியாக அதிகரித்தது. அது மேலும், அதிகரித்து மாலை, 4:00 மணிக்கு, 20,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், அங்குள்ள மெயின் பால்ஸ், மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பஞ்சப்பள்ளி சின்னாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், சின்னாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அந்த தண்ணீரும் ஒகேனக்கல் காவிரியாற்றில் கலப்பதால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.