சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை தர மாட்டோம்
சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை தர மாட்டோம்'கிருஷ்ணகிரி, நவ. 6-சிப்காட் அமைக்க, எக்காரணம் கொண்டும் விவசாய நிலங்களை கொடுக்க மாட்டோம் என்று விவசாயிகள் கூறினர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, நாகமங்கலம் பஞ்.,ல் சிப்காட் அமைக்க உள்ளதாக அரசு அறிவித்து அப்பகுதியில் உள்ள, 3,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களை கையப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது. இதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும் என எதிர்ப்பு தெரிவித்த, 147 குடும்பங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த, 2022 டிசம்பரில் உத்தனப்பள்ளி ஆர்.ஐ., அலுவலகம் முன், 167 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பல்வேறு அரசியல் கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ஓசூர் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரகாஷ், போராட்டக்காரர்களை சந்தித்து, சிப்காட் அமைக்க கட்டாயம் விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம், இது குறித்து அரசிடம் பேசி நல்ல முடிவெடுப்பதாகவும் தெரிவித்ததால், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.ஆனால், கடந்த மாதம் சிப்காட் அமைக்க நிலத்தை எடுக்க வேண்டும் என்று அரசு விரும்புவதாகவும், ஏன் விவசாய நிலங்களை கையப்படுத்தக்கூடாது என்று விளக்கம் அளிக்குமாறு விவசாயிகளுக்கு ஓசூர் சிப்காட் நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால் மிகவும் மன வேதனை அடைந்த விவசாயிகள், 100க்கும் மேற்பட்டோர் சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையப்படுத்தக்கூடாது என்று, நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின் விவசாயிகள் கூறுகையில், சிப்காட் அமைக்க தேர்ந்தெடுத்துள்ள நிலம் முற்றிலும் விவசாயம் செய்யக்கூடிய இடம். எனவே, எக்காரணம் கொண்டும் விவசாய நிலங்களை கையப்படுத்தக்கூடாது. சிப்காட் அமைக்க வேண்டும் என்று எங்கள் நிலத்தில் யாரும் கால் வைக்கக்கூடாது. நாங்கள் யாரும் விவசாய நிலங்களை கொடுக்க மாட்டோம். ஏற்கனவே, 167 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். விவசாய நிலத்தில் சிப்காட் அமைக்க மாட்டோம் என்று ஆளும் கட்சியினர் வாக்குறுதி கொடுத்ததால், நாங்கள் போராட்டத்தை கைவிட்டோம். கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும். சிப்காட் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்,' என்றனர்.