தெருநாய் கடித்து பெண் காயம்; தொடரும் சம்பவத்தால் அச்சம்
ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் மனைவி வெங்கடலட்சுமியம்மா, 55; இவர், நேற்று காலை அப்பகுதியில் குப்பை கொட்ட சென்றார். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று, வெங்கடலட்சுமியம்மாவை சரமாரியாக கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் கடந்த வாரம், அப்பகுதியை சேர்ந்த ஜெயம்மா, 50, நாகலட்சுமி, 36, உட்பட மேலும் சிலரை, தெருநாய்கள் கடித்துள்ளன. இப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிவதால், குழந்தைகளை வெளியில் அனுப்பவே அச்சப்படுவதாகவும், தெருநாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.