| ADDED : மே 11, 2024 06:56 AM
கிருஷ்ணகிரி: குறைந்த விலைக்கு கிரிப்டோ கரன்சி கிடைப்பதாக நம்பி, 20 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்த பெண்ணுக்கு, 15 லட்சம் ரூபாயை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளியை சேர்ந்தவர் பொன் பார்த்திபன். இவரது மனைவி சரண்யா. இவர், மொபைல் போனில் டெலிகிராம் குரூப்பில் வந்த மெசேஜை பார்த்து, துபாயை சேர்ந்த கார்த்திக் என்பவரை தொடர்பு கொண்டு பேசினார். அந்த நேரம் குறைந்த விலைக்கு தன்னிடம் யு.எஸ்.டி.டி., கிரிப்டோ கரன்சி உள்ளதாகவும், அதன் மூலம் உங்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறினார்.இதை நம்பிய சரண்யா, கார்த்திக் கூறிய இரு வங்கி கணக்குகளுக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வீதம், 20 லட்சம் அனுப்பி ஏமாந்தார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரண்யா, கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், சரண்யா அனுப்பிய பணம் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரெனி என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கன்னியாகுமரி சென்ற தனிப்படை போலீசார் ரெனியை பிடித்து விசாரித்தனர். அதில் ரெனியும், கார்த்திக்கிடம் இதே போல, 20 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததும், சரண்யாவிடம், ரெனியின் வங்கி கணக்குகளை கார்த்திக் கொடுத்ததும் தெரிய வந்தது.-இதை தொடர்ந்து, ரெனியின் வங்கி கணக்கில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. அந்த தொகையை மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, சரண்யாவிடம் ஒப்படைத்தார்.