அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் கைது
கிருஷ்ணகிரி, திருப்பத்துாரிலிருந்து, பர்கூர் செல்லும் 'பி6' டவுன் பஸ் நேற்று அதிகாலை பர்கூர் நோக்கி வந்தது. டிரைவராக கப்பல்வாடியை சேர்ந்த வேலன், 45, கண்டக்டராக பைனுாரை சேர்ந்த கோவிந்தராஜ், 54, பணியில் இருந்தனர். பஸ்சில், பர்கூரை சேர்ந்த அபிஷேக், 23 மற்றும் யஷ்வந்த், 22 ஆகியோர் பயணித்துள்ளனர்.இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர். காலை, 5:30 மணிக்கு பஸ் பர்கூர் பஸ் ஸ்டாண்டிற்கு வந்துள்ளது. அனைவரையும் இறங்க கூறிவிட்டு டிரைவர், கண்டக்டர் இருவரும் டீ குடிக்க சென்றுள்ளனர். மீண்டும் பஸ்சை இயக்க வந்தபோது, பஸ்சில் போதையில் படுத்திருந்த அபிஷேக், யஷ்வந்த் இருவரும் இறங்க மறுத்துள்ளனர்.தட்டிக்கேட்ட கண்டக்டர் கோவிந்தராஜை இருவரும் சேர்ந்து தாக்கினர். படுகாயமடைந்த அவர் புகார் படி, பர்கூர் போலீசார் அபிஷேக், யஷ்வந்த் இருவரையும் கைது செய்தனர்.