| ADDED : மே 12, 2024 12:39 AM
அலங்காநல்லுார்:திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே விளாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஷர்மிளா, 42. இவரது வீடு மதுரை, அலங்காநல்லுார் அருகே பாசிங்காபுரம் மீனாட்சி நகரில் உள்ளது. கணவர் உதய்கண்ணன் வெளிநாட்டில் பொறியாளராக உள்ளார். மகன் ஆகாஷ் கண்ணன் சென்னையில் பணிபுரிகிறார். வீட்டில் ஷர்மிளாவின் தாய் சண்முகவள்ளி, 65, பேத்தி வசிக்கின்றனர். சில வாரங்களாக ஆகாஷ் மேற்பார்வையில் வீட்டில் அலமாரி உள்ளிட்ட மர டிசைனிங் வேலை நடக்கிறது. இவர்களது சொந்த ஊரான பாலமேடு அருகே சத்திர வெள்ளாளப்பட்டிக்கு மே 8ல் இன்ஸ்பெக்டரின் மகன், மகள், தாய் சென்றனர். நேற்று முன்தினம் இரவு வந்து பார்த்தபோது, முன்பக்க கதவு மற்றும் பீரோவை உடைத்து உள்ளே இருந்த 450 சவரன் நகைகள், 5 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மாவட்ட எஸ்.பி., அரவிந்தன் நேரில் ஆய்வு செய்தார். வீட்டின் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்காததால், திருடர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் மர டிசைனிங் வேலை செய்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா என, அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையிலான போலீசார் விசாரிக்கின்றனர்.