மதுரை : லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், 'ஓடும் தொழிலாளர்கள்' என அழைக்கப்படுகின்றனர். இரவு, பகல் என தொடர்ந்து தொலைதுார ரயில்களை இயக்கும் இவர்களுக்கு முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.மதுரை ரயில்வே காலனியில், 5 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதிய ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதிக்கு 'ரயில் மரம்- ஓடும் தொழிலாளர்கள் கூடு' என, பெயர் வைக்கப்பட்டுள்ளது.ஒருவருக்கு ஒரு அறை என்ற வகையில் 40 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் குளிர்சாதன வசதி, கட்டில் - மெத்தை, மின்விளக்குகள், மின்விசிறி, மேஜை, நாற்காலி, உடைமைகளை வைக்க தனி மேஜை, படிப்பதற்கான தனி மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.பெண் லோகோ பைலட்டுகளுக்கு இரண்டு மூன்று பேர் சேர்ந்து தங்கி ஓய்வெடுக்க வசதியாக தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நவீன விடுதியில் சமையலறை, உணவு அருந்தும் அறை, புத்தகங்கள் படிக்கும் அறை, யோகா மற்றும் தியான அறை, உடற்பயிற்சி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வெளிவளாக பகுதியில் நடைபயிற்சிக்கு பசுமை பூங்கா, இருக்கைகள் உள்ளன. இயற்கை வெளிச்சம், காற்றோட்டம் இருக்கும் வகையில் விடுதி கட்டப்பட்டுள்ளது.இந்த விடுதி, ஓடும் தொழிலாளர்கள் பணிமுடிந்ததும், ஓய்வெடுத்து மீண்டும் உற்சாகமாக ரயில்களை இயக்க உதவும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.