சென்னை: மதுரை ரயில் நிலையம் 347.47 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் உயர்த்தும் பணிகள் தற்போது 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வரும் 2025ல் முடியும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:மதுரையில் இருந்து தினமும் 96 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 51,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். வழக்கமான பயணிகள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்து செல்லும் முக்கியமான நிலையமாக இருக்கிறது. அதன்படி, ரயில்வே மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், 347.47 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பி அண்ட் சி பிராஜக்ட் லிமிடெட் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு டிச., முதல் பணிகள் மேற்கொள்ள்பட்டு வருகின்றன.மண் பரிசோதனை, நிலப்பரப்பு கணக்கெடுப்பு, பார்சல் அலுவலகம், நடை மேம்பாலங்கள், காத்திருப்பு அறைகள் உள்ளிட்டவை அமையவுள்ள நிலப்பரப்பு தேர்வு பணிகள் முடிந்து, கட்டமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 451 இருசக்கர வாகனங்கள், 244 கார்கள் நிறுத்தும் வகையில் பிரமாண்ட வாகன நிறுத்தம், நிலையத்தின் கட்டிடம் அமையவுள்ள 262 துாண்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ரயில் நிலை மேம்பாட்டு திட்டத்தில், அடித்தளம் மற்றும் முதல் தளம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பிரமாண்ட வாகன நிறுத்த வசதிக்கான துாண்கள் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. நடைமேடை விரிவாக்கத்திற்கான அடித்தள பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இந்த ரயில் நிலையத்தில் இருந்து மதுரை பெரியார் பஸ் நிலையம் செல்ல பிரமாண்ட சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இரண்டு ஸ்கைவாக் வசதி, பயணியர் வருகை, புறப்பாடு ஆகியவைக்கு தனித் தனியாக அரங்குகள், பார்சல்களை கையாள தனிப்பகுதி, நடை மேம்பாலங்கள், லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் இடம் பெற உள்ளன. தற்போது, 50 சதவீத பணிகள் வரை முடிக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.