உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் குடும்பங்களுக்கு இனி எல்லாம் ஆனந்தமே 7 கல்லுாரிகள் தத்தெடுக்கின்றன

போலீஸ் குடும்பங்களுக்கு இனி எல்லாம் ஆனந்தமே 7 கல்லுாரிகள் தத்தெடுக்கின்றன

மதுரை : மதுரை நகர் போலீஸ் குடும்பங்களுக்கு கவுன்சிலிங், கல்வி உட்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் 7 கல்லுாரிகளின் மாணவர்கள் கண்காணிக்க உள்ளனர். மதுரை நகரில் 7 போலீஸ் குடியிருப்புகள் உள்ளன. இதில் நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். சில குடும்பங்களில் கணவன், மனைவி இருவருமே போலீசாக உள்ளனர். அக்குடும்பங்களில் குழந்தைகளை கண்காணிப்பது என்பது சிரமமாக உள்ளது. இதனால் அவர்கள் தவறான பாதையில் செல்ல நேரிடுகிறது. இது குடும்பத்தில் பிரச்னை உருவாக வழிவகுக்கிறது.இதை தவிர்க்க கமிஷனராக டேவிட்சன் இருந்தபோது 'ஆனந்தம்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் மதுரை யில் உள்ள 7 கல்லுாரிகளின் மாணவர்களுக்கு தலா 7 போலீஸ் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் உளவியல், சமூகவியல் படித்தவர்கள். கல்லுாரி முடிந்தும், விடுமுறை நாட்களிலும் போலீஸ் குடும்பங்களுக்கு 'கவுன்சிலிங்' கொடுத்தனர். பள்ளி செல்ல மறுத்த குழந்தைகளை படிக்க வைத்தனர். வீடுகளில் 'டியூசன்' எடுத்தனர். இது நல்ல பலனை தந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமலானது.அதன் பிறகு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் ஆரம்பிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று கமிஷனர் லோகநாதனை போலீசாருக்கான மனநலத்திட்ட நோடல் அலுவலர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் ஏற்பாட்டில் துணை அலுவலர் பேராசிரியர் கண்ணன் சந்தித்து பேசினார். விரைவில் இத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி