உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தைகள் நல வார்டு ஆறு தளங்களுடன் அமையுமா தொலைநோக்கு திட்டமிடல் அவசியம்

குழந்தைகள் நல வார்டு ஆறு தளங்களுடன் அமையுமா தொலைநோக்கு திட்டமிடல் அவசியம்

மதுரை,: மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவுக்கான தனி கட்டடம் மருத்துவக்கல்லுாரி அருகே கட்டப்படும் நிலையில் அதை 6 மாடி கட்டடமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இடநெருக்கடியால் குழந்தைகள் நலப்பிரிவு திணறுகிறது. பழைய கட்டடத்தில் மழை பெய்தால் வார்டுகளின் கான்கிரீட் தளம், சுவர்களில் தண்ணீர் கசிந்து ஒழுகுகிறது. எனவே குழந்தைகள் நலப்பிரிவு குழந்தைகள் நலத்துறை ஆராய்ச்சி மையம் 400 படுக்கை வசதிகளுடன் ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒப்புயர்வு மையமாக மேம்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.இது மத்திய, மாநில அரசுகளின் நிதியில் கட்டப்படும் என்பதால் முதற்கட்டமாக மத்திய அரசின் ரூ.20 கோடியில் தரைத்தளம், முதல், 2வது தளம் மட்டும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளத்தில் பார்க்கிங், வரவேற்பறை, புறநோயாளிகள் பிரிவு, அடுத்தடுத்த இரண்டு தளங்களில் உள்நோயாளிகள், அறுவை சிகிச்சை வார்டுகளாக செயல்பட உள்ளன. பழைய வளாகத்தில் தற்போதும் இரண்டு தளங்களில் தான் இடநெருக்கடியுடன் செயல்படுகிறது. இதனால் புதிய கட்டடத்தில் இரண்டு தளம் போதாது என்பதால் ஆறுதளங்களுக்கு அரசின் ஒப்புதல் கேட்டு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை சார்பில் ஆறுதளத்திற்கான 'பவுண்டேஷன்' அமைத்தால் மட்டுமே அடுத்தடுத்து கட்ட முடியும். கிடைத்த ரூ.20 கோடியில் மட்டும் 2 தளங்கள் கட்டினால் போதும் என நினைத்தால் 'பவுண்டேஷன்' அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டு எதிர்காலத்தில் கூடுதல் தளங்கள் கட்ட முடியாத நிலை உருவாகும். எனவே சுகாதாரத்துறை சார்பில் ஆறுதளங்களுக்கு ஒப்புதல் அளித்து இடைவெளி விடாமல் கட்டுமானத்தை தொடர வேண்டும் என டாக்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை