| ADDED : ஜூன் 23, 2024 04:11 AM
மதுரை: வீட்டிலேயே மூலிகைத்தோட்டம் அமைத்தால் எளிய நோய்களுக்கு கை வைத்தியம் செய்யலாம் என மதுரை மடீட்சியாவில் நடக்கும் பாரம்பரிய மருத்துவ கண்காட்சி கருத்தரங்கில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழும (சி.சி.ஆர்.எஸ்.) தாவரவியல் ஆராய்ச்சி அலுவலர் ராதா தெரிவித்தார்.அவர் பேசியதாவது: வீட்டில் வெள்ளை கரிசலாங்கன்னி, பொன்னாங்கன்னி, திருநீற்று பச்சிலை, கடுகு செடி, வேம்பு, முருங்கை, நொச்சி, ஆடாதோடா வளர்க்கலாம். கற்பூரவள்ளி, துளசி, திருநீற்று பச்சிலை, நொச்சி வளர்த்தால் கொசு வராது. கற்றாழை தீக்காயத்திற்கு மருந்தாக பயன்படும். ஆடாதோடா இலை ஒன்றை அரைத்து சாற்றை குடித்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆடாதோடா மணப்பாகு வீட்டிலேயே தயாரிக்கலாம். செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு கண்டீசஷனராக பயன்படுத்தலாம். ஒரு செம்பருத்தி இலை, ஒன்றிரண்டு சங்கு புஷ்பம் பூக்கள், சிறிது எலுமிச்சை புல் சேர்த்து டீ தயாரிக்கலாம்.கற்பூரவள்ளி இலை சளிக்கு நல்ல மருந்து. இலையை லேசாக வாட்டி சாறெடுத்து குடிக்கலாம். குழந்தைகளுக்கு இலையை பஜ்ஜியாக கொடுத்தால் சாப்பிடுவர். திருநீற்று பச்சிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து தயிர் சேர்த்து சட்னியாக சாப்பிடலாம். திருநீற்று பச்சிலையின் விதை தான் சப்ஜா என்ற பெயரில் கடைகளில் சர்பத்தின் முக்கிய பொருளாக பயன்படுகிறது. வேலி இருந்தால் பிரண்டை, வேலிபருத்தி, முசுமுசுக்கை, துாதுவளை வளர்க்கலாம். இந்த தாவரங்கள் அனைத்தும் கை வைத்திய முறையில் வீட்டிலேயே எளிதாக பயன்படுத்தலாம். விஷத்தன்மை இல்லாதது என்றார்.