உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமங்கலம் அருகே விடிய விடிய கிராமத்தினர் நடத்திய மறியல்

திருமங்கலம் அருகே விடிய விடிய கிராமத்தினர் நடத்திய மறியல்

திருமங்கலம்: கள்ளிக்குடி ஒன்றியம் சென்னம்பட்டியில் கோழிக் கழிவில் உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் துர்நாற்றம் வீசியதால் நிறுவனத்தை மூடவலியுறுத்தி கிராமத்தினர் இரவு முழுவதும் மறியலில் ஈடுபட்டனர்.இக் கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு இந்த உரநிறுவனம் கேரளாவைச் சேர்ந்தவர்களால் துவக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்ட இந்நிறுவனம், பொதுமக்களின் எதிர்ப்பால் இங்கு இடம் பெயர்ந்தது.இங்கும் துவங்கும் முன்பே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சியினர் ஆதரவால் இங்கு துவங்கி செயல்பட்டது. மதுரை உட்பட சுற்றுவட்டாரத்தில் கோழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்படும். இங்கு வேகவைத்து, அரைத்து உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் கேரளாவில் உள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு அடி உரத்திற்காக செல்கிறது.நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சோளம்பட்டி, கே.சென்னம்பட்டி குராயூர் பகுதி பொதுமக்கள் கள்ளிக்குடி - காரியாபட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அந்த நிறுவனத்திற்கு கோழிக் கழிவை கொண்டு சென்ற வேனை சிறை பிடித்தனர். இரவு 11:00 மணிக்கு துவங்கிய மறியல், அதிகாலை 4:00 மணி வரை நீடித்தது. அவர்களிடம் கள்ளிக்குடி தாசில்தார் செந்தாமரை, திருமங்கலம் டி.எஸ்.பி., அருள், இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா பேச்சுவார்த்தை நடத்தினர்.நிறுவனத்தை மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிட முடியும் என கிராமத்தினர் தெரிவித்தனர். 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்ததால் மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை