வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி
மதுரை: வேளாண் பொறியியல் துறை சார்பில் நெல்லியேந்தல்பட்டி அரசு இயந்திர கலப்பை பணிமனை வளாகத்தில் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடந்தது.இணை இயக்குநர் சுப்புராஜ் துவக்கி வைத்தார். வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் சரவணபெருமாள் முன்னிலை வகித்தார். செயற்பொறியாளர் கண்ணன் கூறியதாவது: வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம், குறு, சிறு, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.முதல்வரின் சூரியசக்தி பம்ப் செட் திட்டத்தில் 60 முதல் 70 சதவீத மானியம் தரப்படுகிறது. உழவன் செயலி அல்லது இ - வாடகை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்களை பயன்படுத்த முன்பதிவு செய்யலாம். திறன் குறைந்த அல்லது பழுதடைந்த பழைய மின் மோட்டாருக்கு பதிலாக புதிய மின்மோட்டார் வாங்க குறு, சிறு விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.15ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்றார். வேளாண் இயந்திரங்களின் செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் வேளாண் கருவிகள் இலவசமாக பழுதுநீக்கப்பட்டன.