ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தல்
மதுரை: தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மாவட்ட தலைவர் எழிலரசி, செயலாளர் சிவகுமார், பொருளாளர் செந்தில்குமார் தலைமையில் கலெக்டரிடம் அளித்த மனு:மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கி வைக்கப்பட்டது. இச்சேவையில் பெண் ஊழியர்களும் உள்ளனர். இரவில் பெண் பணியாளர் தங்க வசதியோ, கழிவறை வசதி போன்றவையோ கிடையாது. சரந்தாங்கி கிராமத்தில் உள்ள ஆம்புலன்சை சத்திரப்பட்டி அல்லது காஞ்சரம்பேட்டையில் நிறுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். அவனியாபுரத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ளதால் அங்கு சிறிய வகை ஆம்புலன்ஸ் சேவையை மாற்றி, டெம்போ டிராவலர் ஆம்புலன்சை இயக்க வேண்டும்.பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீண்டும் ஆம்புலன்ஸ் சேவையை துவக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 'தாய்' ஆலோசனை கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஊழியர்களின் குறைகளை அரசுக்கு நேரடியாக தெரியப்படுத்த வரும் காலங்களில் தாய் ஆலோசனை கூட்டத்தில்108 ஊழியர்களும் பங்கேற்க வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.