உயிரை காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் உயிரை பறிக்க முயற்சி நள்ளிரவில் மருத்துவமனையில் குவிந்த ஆம்புலன்ஸ்கள்
மதுரை: மதுரையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை காப்பாற்ற வந்த '108' ஆம்புலன்ஸ் பெண் ஊழியர், டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கல் வீசப்பட்டதில் ஆம்புலன்ஸ் முன்புற கண்ணாடி சேதமுற்றது. இதுதொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியர் சரவணகுமார் 30, என்பவர் கைது செய்யப்பட்டார்.மதுரை கோச்சடை நடராஜ் நகரில் நேற்றுமுன்தினம் இரவு, வீட்டில் தனது சகோதரர் கணேசன் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக '108' ஆம்புலன்சிற்கு அவரது சகோதரி முருகேஸ்வரி தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மருத்துவ உதவியாளர் தேவதா 36, டிரைவர் அருண்குமார் 32, ஆகியோர் முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டனர். அங்கிருந்த அவரது மகன், தந்தையை ஆம்புலன்சில் அழைத்துச்செல்ல எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நோயாளியின் உடல்நிலையை கருத்திற்கொண்டு அழைத்துச்செல்ல முயன்றபோது, ஆத்திரமுற்ற மகன் கல்வீசி தாக்கினார். சுதாரித்துக்கொண்ட இருவரும் ஒதுங்கிக்கொள்ள ஆம்புலன்ஸ் முன்புற கண்ணாடியை ஒரு கல் உடைத்தது.தாக்குதலில் காயமடைந்த தேவதா, அருண்குமார் போலீசிற்கும், தங்களது சக தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்க, மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்த '108' ஊழியர்கள், ஆம்புலன்ஸ்களோடு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். காலையில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிளம்பிச்சென்றனர். நேற்று காலை அந்நபரிடம் விசாரித்தபோது அவர் பிரபல தனியார் நிதி நிறுவன ஊழியரான சரவணகுமார் எனத்தெரிந்தது. அவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.'108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் இருளாண்டி கூறுகையில், 'மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் எங்களுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யாமல் இருக்க சில 'செல்வாக்கு' உள்ள நபர்கள் போலீசாரிடம் பேசினர். ஆனால் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் அந்த நபர் கைது செய்யப்பட்டார். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நலன்கருதி சில கடுமையான சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்'' என்றார்.