மேலும் செய்திகள்
ஓராசிரியருடன் இயங்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்
26-Jun-2025
மதுரை: மதுரையில் ஆசிரியர்கள் பணப் பலன், ஓய்வு பெற்றோரின் ஓய்வூதியப் பலன் சார்ந்த ஆவணங்கள் கல்வி அலுவலகங்களில் தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.மாவட்ட அளவில் உயர், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதிகாண் பருவம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் உட்பட பணப் பலன்கள், ஓய்வூதியப் பலன்கள் சார்ந்த ஆவணங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம், ஆசிரியர்கள் நியமனத்திற்கான அனுமதி உட்பட கல்வி அலுவலகங்களில் ஏராள விண்ணப்பங்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால் அதன் மீது நடவடிக்கைகள் துரிதமாக இல்லை.இதனால் ஓய்வு பெற்று பல மாதங்களாகியும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பலர் ஓய்வூதியப் பலன்களை பெறமுடியாமல் தவிக்கின்றனர். ஆசிரியர், அலுவலர்களுக்கான குறைதீர்க் கூட்டம் முறையாக நடப்பதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வி அலுவலகங்களில் ஒவ்வொரு ஆவணங்களையும் ஒரு பிரிவு அலுவலர்கள் கண்காணிக்கின்றனர். தேர்வுநிலை, சிறப்பு நிலை, உதவிபெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம், ஆசிரியர் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் பல மாதங்களாக இழுத்தடிக்கப்படுகின்றன.மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர், தலைமையாசிரியர்கள் 40க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கின்றனர். 'எதிர்பார்ப்புகளை' பூர்த்தி செய்யாவிட்டால் ஆவணங்களில் ஏதாவது கேள்வி எழுப்பி திருப்பி அனுப்புகின்றனர். அலுவலக அளவில் பைல்களை நகர்த்துவது குதிரைக் கொம்பாக உள்ளது. சி.இ.ஓ.,வுக்கு செல்லும் பைல்கள் மட்டும் தேங்காமல் உடனே கையெழுத்தாகின்றன. அதுபோல் அலுவலக அளவிலும் விரைவில் பைல்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஆசிரியர், அலுவலர்களுக்கான குறைதீர் கூட்டங்களை உரிய முறையில் நடத்த வேண்டும் என்றனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளி ஆசிரியர்களுக்கான ஆவணங்களும் இழுத்தடிக்கப்படுகின்றன. குறிப்பாக தேர்வுநிலை, சிறப்பு நிலை ஆவணங்கள் இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பி, திரும்பி வருவதற்குள் ஓராண்டை தாண்டுகிறது என ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
26-Jun-2025