| ADDED : மே 30, 2024 07:29 PM
திருமங்கலம்,:மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் உயிரிழந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,யின் மகளுக்கு, போலீஸ் ஸ்டேஷனிலேயே போலீசார் இணைந்து வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக இருப்பவர் சங்கீதா, 28, இவரது கணவர் ராஜபிரபு, சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருநகர் போலீசில் எஸ்.எஸ்.ஐ.,யாக வேலை பார்த்த, சங்கீதாவின் அப்பா ஜோதிகரன், கடந்த 2015ல் இறந்தார். கருணை அடிப்படையிலான வேலை அவரது வாரிசான சங்கீதாவிற்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், சங்கீதாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 5 மாதங்களுக்கு முன் சங்கீதாவின் அம்மா மல்லிகா, உடல்நல குறைவால் இறந்துவிட்டார். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத நிலையில் தன் கணவரது வீட்டிலேயே சங்கீதா வசிக்கிறார்.இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான அவருக்கு கள்ளிக்குடி போலீஸ் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் லட்சுமி லதா, எஸ்.ஐ.,க்கள் மணிமொழி, ஜெயக்குமார், எஸ்.எஸ்.ஐ., வனிதா மற்றும் போலீசார் நிகழ்ச்சியை நடத்தினர்.சங்கீதாவிற்கு வளையல் அணிவிக்கப்பட்டு, ஏழு வகை சாப்பாடு பரிமாறப்பட்டது. அதன் பின், போலீசார் மற்றும் வந்திருந்த மக்களுக்கு விருந்து நடந்தது. பெற்றோர் இல்லாத போலீஸ்காரரின் மகளுக்கு, போலீசார் இணைந்து வளைகாப்பு நடத்திய நிகழ்ச்சி, பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.