இயற்கை விவசாயத்திற்கு மானிய சலுகை அவசியம்; பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தல்
மதுரை : ''இயற்கை விவசாயிகளுக்கு மானிய சலுகைகள் அவசியம்,'' என, பாரதிய கிசான் சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இயற்கை சாகுபடி முறையில் பெரும்பாலும் மாட்டுச்சாணம் தான் முக்கிய இடுபொருளாக உள்ளது. மாடுகள் இல்லாதவர்கள் மாட்டுச்சாணத்தை விலைக்கு வாங்கி, மண்புழு உரம், பஞ்சகாவ்யம், ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்களை தயாரித்து பயிருக்கு தருகின்றனர்.இதற்கான உற்பத்தி செலவு கூடுதலாகிறது. மண்ணும், மனிதனும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதல் செலவை பற்றி கவலைப்படாமல் இயற்கை சாகுபடி செய்யும் விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. இயற்கை சாகுபடி விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கினால் ரசாயன சாகுபடி விவசாயிகளும் இயற்கை சாகுபடிக்கு மாறி விடுவர். கடந்தாண்டு தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில், இயற்கை விவசாயத்திற்கு என, 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது இயற்கை விவசாயிகளை முழுமையாக சென்றடையவில்லை. தமிழக அரசின் வேளாண் துறையின் கீழ் தான் இயற்கை சாகுபடி விவசாயிகளுக்கு ஆர்கானிக் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த பட்டியலில் உள்ள விவசாயிகளை மாநில அரசு அடையாளம் கண்டு ஏக்கருக்கு, 10,000 வீதம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க வேண்டும். இயற்கை விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு சென்றால், ரசாயன சாகுபடி விளைபொருட்களுடன் சேர்த்து ஒரே விலைக்கு விற்கின்றனர். உழவர் சந்தைகளில் இயற்கை சாகுபடி விளைபொருட்களுக்கு தனியாக கடை அமைக்க வேண்டும் அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிரந்தர விற்பனை சந்தை ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.