| ADDED : ஜூன் 04, 2024 06:36 AM
மதுரை : மதுரையில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டிய பகுதிகளில் தரமற்ற சாலை அமைக்கப்படுவதாகவும், நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை பைசல் செய்தது.புதுார் ஜெயமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. குழாய்களை பதித்த பின் சரியாக மூடவில்லை. குண்டும், குழியுமாக உள்ளன. துாசி படர்கிறது. கே.கே.நகர், அண்ணாநகர், புதுார், மேலப்பொன்னகரத்தில் புதிதாக தரமற்ற முறையில் சாலை அமைக்கப்படுகிறது. அரசாணைப்படி ஏற்கனவே இருந்த சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும். இதை பின்பற்றவில்லை. மக்களின் வரிப் பணம் வீணாகிறது. உயரமாக சாலை அமைப்பதால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை பணியை நிறுத்த வேண்டும். அனுமதி அளித்த மாநகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: விதிகளை பின்பற்றி முறையாக சாலை அமைக்கப்படுகிறது. புகார் வந்தால் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரரின் புகார் பொத்தாம் பொதுவாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர்.