உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சொக்கா... இதென்ன திருவிளையாடல்: திருவாதவூர் சிதலமடைந்த கோபுர சிலைகளால் பக்தர்கள் கவலை

சொக்கா... இதென்ன திருவிளையாடல்: திருவாதவூர் சிதலமடைந்த கோபுர சிலைகளால் பக்தர்கள் கவலை

மேலுார்: திருவாதவூரில் அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் கோபுர சிலைகள் சிதலமடைந்து வருவது பக்தர்களை கவலை அடைய செய்துள்ளது.இக்கோயில் பாண்டியர் காலத்தில் உருவாக்கப்பட்டது. மீனாட்சி கோயில் நிர்வாக பராமரிப்பில் உள்ளது. கோயிலில் சிவ, கபில, பிரம்ம, வாயு உட்பட 7 தீர்த்தங்கள் உள்ளன. சிவபெருமான் உமையம்மைக்கு தலச்சிறப்புகளை உணர்த்தும் போது மதுரையம்பதியும், வாதபுரியும் தன் இரு கண்களுக்கு ஒப்பானவை என்று உரைத்தார். மேலும் மகாசேனபாண்டியன் திருமறைநாதருக்கு சாற்றிய கொன்றை மாலை மதுரையம்பதியின் சொக்கலிக்கப் பெருமானிடத்தில் இருப்பதை காட்டி இவ்விரு தலங்களிலும் தான் ஒரே மூர்த்தியாக விளங்குவதை பாண்டியனுக்கு உணர்த்தினார்.மதுரையம்பதி சுந்தரேஸ்வர பெருமானே இங்கு திருமறைநாதராகவும், அன்னை மீனாட்சியே வேதநாயகி அம்பாளாக எழுந்தருளியுள்ளனர். மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான் சாபநீக்கம் பெற்றதும், கபிலமுனிவரின் வீரகத்தி தோஷம் நிவர்த்தியானதும், பிருகுமுனிவரின் சாபத்தால் தனது தன்மை குன்றிய அக்னிதேவன் முந்தைய நிலைமையை பெற்றதும் இங்குதான். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தலம் பராமரிப்பில்லாமல் உள்ளது.பக்தர் சதீஷ்: கோபுரத்தில் வரலாற்றுகளை விளக்கும் சிலைகள் சிதிலமடைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகின்றன. கருவறை சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்களின் பூச்சுகள் பெயர்ந்துவிட்டன. அதனால் அறநிலையத்துறையினர் நிதி ஒதுக்கி பழமை மாறாமல் கோயிலை பராமரிக்க வேண்டும் என்றார்.கோயில் நிர்வாகிகள் கூறுகையில், சிலைகள் சிதிலமடைந்தது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ