உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

மதுரை : கஞ்சா பறிமுதல் வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் தேனி பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்க மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது.சென்னையை சேர்ந்தவர் சவுக்கு சங்கர். பெண் போலீசார், போலீஸ் அதிகாரிகள் குறித்து யூடியூப் சேனலில் அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவரை மே 4ல் கைது செய்தனர்.கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட மேலும் சில வழக்குகள் வெவ்வேறு போலீசில் பதிவு செய்யப்பட்டன. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தபோது காரில் கஞ்சா இருந்ததாக சவுக்கு சங்கர், உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம்பிரபு மீது பழனி செட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கில் சவுக்கு சங்கர் மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் மே 8 ல் ஆஜர்படுத்தப்பட்டார்.அவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் உட்பட 3 பேர் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி செங்கமலச்செல்வன் முன் நேற்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மதியம் 12.25 மணிக்கு சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அதற்குரிய சான்றை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. மீண்டும் மதியம் 2:55 மணிக்கு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.அரசு தரப்பு: சவுக்கு சங்கரை பழனிசெட்டிபட்டி போலீஸ் காவலில் 7 நாட்கள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.சவுக்கு சங்கர்: போலீஸ் விசாரணைக்கு அனுமதிப்பதில் ஆட்சேபனை இல்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: இரண்டு நாட்கள் விசாரிக்க அனுமதிக்கப்படுகிறது. விசாரணை முடிந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி மே22 மதியம் 3:00 மணிக்கு இந்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். அவரை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் 2 நாட்களில் தினமும் 3 வேளை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார். ஜாமின் மனு மீதான விசாரணையை மே 23 க்கு நீதிபதி ஒத்திவைத்தார். நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ