உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கப் அடிக்குது கல்லுப்பட்டி பண்ட்ரங்குளம் நெடியும் சகிக்கலை, கொசுக்கடியும் தாங்கலை

கப் அடிக்குது கல்லுப்பட்டி பண்ட்ரங்குளம் நெடியும் சகிக்கலை, கொசுக்கடியும் தாங்கலை

டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி பண்ட்ரங்குளத்தை துார்வாராமல் கழிவுநீர் தேக்கப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் தொற்று நோய் அச்சத்தில் வசிக்கின்றனர்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் குளியல் குளமாக இருந்த பண்ட்ரங்குளம் தற்போது சாக்கடை குளமாக மாறியுள்ளது. சாக்கடை குளமாக உருவானதால், கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. தெருக்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தி, தெருவுக்குத் தெரு பிளக்ஸ் போர்டு வைத்து வருகிறது டி.கல்லுப்பட்டி பேரூராட்சி. ஆனால் சுகாதார சேவையில் படுமோசமாக செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இப்பகுதியில் பெரும் குளமாக சாக்கடை தேங்கி நிற்கிறது.

பகலிலும் கொசுக் கடி

பகலில் படையெடுக்கும் கொசுக்களின் கடி தாங்க முடியாமல் மக்கள் அலறுகின்றனர். பேரூராட்சி அதிகாரிகளோ கண்டும், காணாமல் உள்ளனர். டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் 15 ஆயிரம் பேருக்கு மேல் வசிக்கின்றனர். ஆனால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.பகலில் கடிக்கும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் என்பதால் விரைந்து கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. சாக்கடை கால்வாய் முறையாக துார்வாரப்படாததால் மக்கள் அசுத்தம், துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு வசிக்கின்றனர். எனவே மக்களின் சுகாதார மேம்பாட்டில் கல்லுப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !