மதுரை தி.மு.க., கூட்டத்தில் வேட்டி, சேலைகள் மாயம்
மதுரை : மதுரை புதுாரில் தி.மு.க., வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் நேற்றிரவு நடந்த முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் நலத்திட்டம் வழங்கும் விழாவில் வேட்டி, சேலைகள் மாயமாகின.நகர் செயலாளர் தளபதி தலைமை வகித்தார். மூத்த நிர்வாகிகள் வேலுச்சாமி, மாணவரணி பொறுப்பாளர் துரை கோபால்சாமி பங்கேற்றனர். வட்ட செயலாளர்கள் மூலம் நலத்திட்டங்கள் பெற பயனாளிகளுக்கு டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டன. மாலை முதல் பயனாளிகள் காத்திருந்தனர். விழாவின் போது பலருக்கு வேட்டி, சேலைகள் இல்லை. பயனாளிகள் நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட நிர்வாகிகள் புறப்பட்டனர். பின் டோக்கன் உள்ளவர்களுக்கு தலா ரூ.200 கொடுத்து கட்சியினர் அனுப்பி வைத்தனர்.நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஒரு வட்ட செயலாளருக்கு தலா 30 டோக்கன்கள் வழங்கி பயனாளிகளை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான செலவு தொகையை அவர்களுக்கு கட்சி வழங்கவில்லை. அதிருப்தியடைந்த நிர்வாகிகள் சிலரே வேட்டி, சேலைகளை கடத்தி சென்றனர். அதற்கு பதிலாக மாவட்ட நிர்வாகிகளை பணம் கொடுக்க வைத்தனர். வேட்டி, சேலைகள் மாயமானது குறித்து விசாரிக்க கட்சி உத்தரவிட்டுள்ளது என்றனர்.