உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆமூரில் தானக்கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஆமூரில் தானக்கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஒத்தக்கடை, : 'மதுரை ஆமூரில் 17 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த தானக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம், அறிவு செல்வம், சிற்பத்துறை ஆய்வாளர் தேவி தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: திருமோகூர் - திருவாதவூர் ரோட்டில் உள்ள ஆமூர், கல்வெட்டுகளில் 'நல்லணி ஆமூர்' என்று உள்ளது. 9ம் நுாற்றாண்டில் வணிக நகரமாக இருந்துள்ளது.இங்கு வட்டெழுத்துக்களுடன் கூடிய மடைத்துாண் கல்வெட்டு, 12 ஆம் நுாற்றாண்டில் மதுரையை ஆண்ட முதலாம் சடையவர்ம குலசேகர பாண்டியன் காலத்தில் திசையாயிரத்து ஐஞ்நுாற்றுவர் என்ற வணிகக் குழுவினர் கட்டிய கோயில், 13ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்த திறந்தவெளியில் மடை கரையில் இருக்கும் சிவலிங்கம், நந்தி, முருகன் சிற்பங்களை கொண்ட சிதைந்த நிலையிலான சிவன் கோயிலும் உள்ளது. அத்துடன் மடை கரையில் இருக்கும் மடைச்சியம்மன் கோயில், சமீபத்தில் கட்டிய சுமை தாங்கி கல் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை கொண்டுள்ளன.இந்த கிராமத்தில் உள்ள விவசாயி சந்தானம், தங்கள் நிலத்தில் புதைந்த நிலையில் உள்ள கல்லில் பழமையான எழுத்துக்கள் உள்ளதாக தெரிவித்தார். அதனை பார்த்த போது 17ம் நுாற்றாண்டை சேர்ந்த மன்னர் சொக்கநாத நாயக்கர் காலத்திய கல்வெட்டு என தெரியவந்தது.வைகாசி மாதம் பூர்வபட்சத்தில் திரயோதசியும், சித்திரை நட்சத்திரமும் என்று ஆரம்பிக்கும் இந்த கல்வெட்டு 4 அடி உயரம் ஒன்றே கால் அடி நீளம், அரை அடி அகலத்துடன் உள்ளது. இதன் மையப்பகுதி சிதைந்துள்ளதால், சொக்கநாத நாயக்க மன்னர் செய்த தர்மம் எந்தவிதமான தர்மம் என அறிய முடியவில்லை. கல்வெட்டின் கீழ் பகுதியில் கங்கை கரையில் காராம் பசுவையும், மாதா, பிதாவையும் கொன்ற தோஷத்தில் போவான் என்று முடிகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ