| ADDED : மே 31, 2024 05:25 AM
மதுரை : 'மதுரையில் தானமாக வந்த உடலை அலைக்கழித்து அவரின் குடும்பத்தினரை மனவேதனைக்கு ஆளாக்கியது முதல்வருக்கு தெரியுமா'' என அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.கட்சியின் மருத்துவரணி இணைச்செயலாளராகவும் உள்ள அவர் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் விமானப்படை வீரர் வேலுச்சாமி விருப்பப்படி அவரது உடலை மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் ஒப்படைக்க உரிய அனுமதிபெற்று எடுத்துச்செல்லப்பட்டது. லோக்சபா தேர்தல் ஓட்டு பெட்டிகள் மருத்துவக் கல்லுாரியில் வைத்திருப்பதால் ஜூன் 4 வரை உடலை அனுமதிக்க முடியாது என மறுக்கப்பட்டது. பல கட்ட போராட்டத்திற்கு பின்பு கல்லுாரி நிர்வாகத்திடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.தற்போது உடல் உறுப்பு தானமாக வந்த அவசர நிலையை கூட கையாளாகாமல் தொடர்ந்து அலைகழித்தது வேதனைக்குரியது. உடல் உறுப்பு தானம் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் முதலிடத்தில் இருந்தது. தற்போது தி.மு.க., அரசு உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்கு அரசின் முழு மரியாதை மேற்கொள்ளப்படும் என்றும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் என்றும் அ.தி.மு.க., அரசின் சாதனையை முதல்வர் ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி அதை நீட்டிப்பு செய்து வருகிறார்.மதுரையில் தானமாக வந்த உடலை அலைக்கழித்து அவரின் குடும்பத்தினரை மனவேதனைக்கு ஆளாக்கியது முதல்வருக்கு தெரியுமா. இதுபோன்று நிர்வாக சீர்கேடு தொடர்ந்தால் உடல் உறுப்பு தானம் செய்பவர்கள் எப்படி மனம் உவந்து செய்வார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.