அனைவருக்கும் குடிநீர்; விவாதிக்க கிராம சபை தண்ணீர் தினத்தில் நடக்கிறது
மதுரை: தமிழகத்தில் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தி, குடிநீர் குறித்து விவாதிக்க கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபை 2025 க்கான உலக தண்ணீர் தினத்தை 'பனிப்பாறை பாதுகாப்பு' என்ற கருப்பொருளில் கொண்டாட உள்ளது. இதையொட்டி 2030க்குள் அனைவருக்கும் தண்ணீர், சுகாதாரம் சென்று சேர்ந்திட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதனை உலக தண்ணீர் தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் எதிரொலிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா கலெக்டர்களுக்கு அறிவுறுத்துதல் வழங்கியுள்ளார்.அவரது உத்தரவில், இக்கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி மார்ச் 22 காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும். மதச்சார்புள்ள எந்த இடத்திலும் கூட்டத்தை நடத்தக் கூடாது.கூட்டத்தில் வான் தரும் மழைநீரை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தல், உடைந்த குழாய்களை சரிசெய்து வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்தல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீரின் துாய்மையை பாதுகாத்தல், மாசுபாட்டை தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவிக்க வீட்டுக்கொரு மரம் வளர்த்தல், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி புனரமைத்தல், நீரின் முக்கியத்துவத்தை குழந்தைகளிடம் எடுத்துரைத்தல் என செயல்பட வேண்டும்.சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய, மேல்நிலை தொட்டி, தரைமட்ட தொட்டியை மாதம் இருமுறை சுத்தம் செய்வது, தினமும் தகுந்தளவு குளோரின் கலந்து குடிநீர் வினியோகிப்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.