உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வனத்துறை அனுமதியின்றி மின்வேலியா; தரைத்தள கிணறு இருந்தாலும் நடவடிக்கை

வனத்துறை அனுமதியின்றி மின்வேலியா; தரைத்தள கிணறு இருந்தாலும் நடவடிக்கை

மதுரை: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 5 கி.மீ., தொலைவிற்குள் மின்வேலி அமைக்க வனத்துறை அனுமதி பெற வேண்டும் என மாவட்ட வன அலுவலர் தருண்குமார் தெரிவித்தார்.தமிழ்நாடு மின்வேலி (பதிவு மற்றும் ஒழுங்கு) விதிகள் 2023 ன் கீழ் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்து 5 கி.மீ., தொலைவிற்குள் மாவட்ட வன அலுவலர் அனுமதியின்றி மின்வேலி அமைக்கக்கூடாது. மின்வேலி அமைக்க விரும்பும் நிலத்தின் உரிமையாளர் இதற்கான அனுமதி கடிதத்தை மாவட்ட வன அலுவலருக்கு அனுப்ப வேண்டும். இடத்தை நேரில் ஆய்வு செய்த பின் படிவம் 1 வழங்கப்படும். தமிழ்நாடு மின்வாரிய உதவி கோட்ட பொறியாளர் நிலையில் உள்ள அதிகாரி மூலம் இடம் ஆய்வு செய்யப்படும். தோட்டம் முழுமைக்கான வேலியா, பகுதி வேலியா, அந்த பகுதியில் விலங்குகள் நடமாட்டம் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்ட பின் படிவம் 2 வழங்கப்படும். மின்வேலி அமைக்க தகுதியில்லாத இடமாக இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.மின்வேலி அமைக்கப்பட்ட பின் மாவட்ட வன அலுவலர் பதிவுச் சான்றிதழ் (படிவம் 5) வழங்குவார். இது மூன்றாண்டுகளுக்கு செல்லுபடியாகும். சான்றிதழ் காலாவதியாவதற்கு 3 மாதங்கள் முன்பாக மீண்டும் புதுப்பிக்க வேண்டும்.அனுமதியின்றி மின்வேலி அமைத்தவர்கள் பற்றிய விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலர் தருண்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: உசிலம்பட்டி குஞ்சாம்பட்டியில் மின்வேலியில் சிக்கி ஒருவர் இறந்த நிலையில் அனுமதியின்றி மின்வேலி அமைக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்தனர். அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கொட்டாம்பட்டியில் பாதுகாப்பற்ற தரையோடு பதிந்த கிணறுகள் உள்ளன. வனவிலங்குகள் நடந்து செல்லும் போதே கிணற்றில் விழுந்து இறக்கின்றன. கொட்டாம்பட்டியில் இத்தகைய கிணறு வைத்திருப்பவர்கள் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வனவிலங்குகள் இறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை